விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிரபலமான தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் வெகு விரைவில் நிறைவு பெறுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் என்றாலே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும். அந்த வகையில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.

சகோதரர்களின் அன்பையும், குடும்ப ஒற்றுமையையும், பிரதிபலிக்கும் இத்தொடர் மக்களை வெகுவாக ஈர்த்தது. குடும்பங்களில் நிகழும் சிறு சிறு சண்டைகள் குழப்பங்களை சமாளித்து இளைய சகோதரர்களிடம் அன்பு காட்டி, கூட்டு குடும்பத்தை சிறப்பாக நிர்வகிக்கும் அண்ணன் மற்றும் அண்ணி கதாபாத்திரங்கள் இத்தொடருக்கு பக்கபலம்.

5 வருடங்களாக குடும்பங்களிடையே அதிக வரவேற்பை பெற்று நன்றாக ஓடிக்கொண்டிருந்த இத்தொடர் முடிவுக்கு வரவுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த குமரன் தங்கராஜன் மற்ற நடிகர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

