“அமெரிக்கா கொடுத்த ஸ்கிரிப்ட்”.. பாகிஸ்தான் பிரதமரின் ட்வீட்டில் சிக்கிய அந்த ஒரு வார்த்தை… உலகமே உற்றுநோக்கும் ட்விட்…!

By Nanthini on சித்திரை 8, 2026

Spread the love

வளைகுடா பிராந்தியத்தில் நிலவி வந்த போர் பதற்றம் ஒரு மாத கால மோதலுக்குப் பிறகு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்பை முதலில் வெளியிட, அதனைத் தொடர்ந்து ஈரானும் இரண்டு வார காலத்திற்குத் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்றும், சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியத்துவமான ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த அமைதி முயற்சியின் அடுத்த கட்டமாக, வரும் ஏப்ரல் 10-ம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இக்கட்டான சூழலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக ஷெரீப் பதிவிட்டிருந்தார். ஆனால், லெபனான் மீதான தாக்குதல் நிறுத்தப்படாது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனடியாகத் தெளிவுபடுத்தியது, ஷெரீப்பின் அறிவிப்பில் இருந்த நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியது.

   

குறிப்பாக, ஷெரீப் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட செய்தியின் ‘எடிட் ஹிஸ்டரி’ (Edit History) நெட்டிசன்களின் கேலிக்கு ஆளாகியுள்ளது. அவர் பதிவை வெளியிடுவதற்கு முன்பு, அதில் “Draft – Pakistan’s PM Message on X” என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைச் சுட்டிக்காட்டியுள்ள சமூக வலைதளப் பயனர்கள், பாகிஸ்தான் பிரதமர் சொந்தமாக எதையும் யோசிக்காமல், அமெரிக்கா போன்ற நாடுகள் தயாரித்துக் கொடுத்த அறிக்கையை அப்படியே நகலெடுத்து (Copy-Paste) பதிவிட்டுள்ளார் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

   

இருப்பினும், பொதுவாகவே முக்கியத் தலைவர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் முன்கூட்டியே தட்டச்சு செய்யப்பட்டு ‘டிராஃப்ட்’ (Draft) வடிவிலேயே சேமிக்கப்படும் என்றும், அதில் தவறுதலாக அந்த தலைப்பு நீக்கப்படாமல் பதிவிடப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். எது எப்படியோ, வளைகுடா போர் நிறுத்த அறிவிப்பில் பாகிஸ்தான் பிரதமர் காட்டிய கூடுதல் ஆர்வம், அவருக்குப் பாராட்டுக்கு மாறாக சமூக வலைதளங்களில் பெரிய அளவில் நக்கலையும் கிண்டலையும் பெற்றுத் தந்துவிட்டது.