சென்னை மணலி, அரிகிருஷ்ணாபுரம் அம்மன் நகர் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் (43). பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவரது மனைவி சுனிதா சமீபத்தில் உயிரிழந்தார். உயிருக்கு உயிராக நேசித்த மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல், கடந்த மூன்று நாட்களாக ராஜசேகர் மீள முடியாத சோகத்திலும் தீவிர மன உளைச்சலிலும் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் ராஜசேகரின் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உட்புறமாகத் தாழ்ப்பாளிடப்பட்டிருந்தது. கதவைத் தட்டியும் உள்ளிருந்து எவ்வித பதிலும் வராததால், மணலி காவல் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ராஜசேகர் வீட்டின் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
