கனடா நாட்டில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், எந்தவித வலியோ உணர்ச்சியோ இன்றி ஆழ்ந்த தூக்கத்திலேயே ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ள வினோத சம்பவம் உலகளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று குழந்தைகளுக்குத் தாயான கரோலினா மொரினோ (27) என்ற அந்தப் பெண்மணி, தனக்கு நேர்ந்த இந்த அரிய மற்றும் நெகிழ்ச்சியான பிரசவ அனுபவத்தை மூன்று மாதங்களுக்குப் பிறகு தனது டிக்டாக் பக்கத்தில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
கரோலினாவுக்கு என்ற பாக்டீரியா தொற்று இருந்ததால், அது குழந்தையைப் பாதிக்காமல் இருக்க அவருக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளும், பிரசவ வலியைக் குறைப்பதற்காக ‘Epidural’ என்ற தண்டுவட மரத்துப்போகும் ஊசியும் செலுத்தப்பட்டது. இதனால் வலி குறைந்ததால் அவர் சுமார் இரண்டு மணிநேரம் ஆழ்ந்து தூங்கியுள்ளார். அந்தச் சமயத்தில் குழந்தையின் இதயத்துடிப்பைப் பரிசோதிக்க வந்த செவிலியர், ஸ்கேனிங் கருவியில் துடிப்பு கேட்காததால் அதிர்ச்சியடைந்து படுக்கை விரிப்பை விலக்கிப் பார்த்துள்ளார். அப்போது தாய்க்குத் தெரியாமலேயே குழந்தை பிறந்து, படுக்கையில் எவ்வித சத்தமும் இல்லாமல் குப்புறக் கிடந்ததைக் கண்டு செவிலியர் உறைந்துபோனார்.
உடனடியாகச் செயல்பட்ட செவிலியர், குழந்தையை எடுத்து முதலுதவி அளித்துத் தேய்த்ததும் குழந்தை அழத் தொடங்கிச் சுவாசித்துள்ளது. தாயும் சேயும் தற்பொழுது நலமாக உள்ள நிலையில், இது குறித்து மருத்துவர்கள் விளக்குகையில், “ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று பிரசவங்களைப் பார்த்த பெண்களுக்குத் தசை தளர்வு காரணமாகவும், அதிக மன அழுத்தம் இருக்கும் சூழலிலும் இது போன்ற அரிய பிரசவங்கள் நிகழ வாய்ப்புகள் உண்டு” என்று தெரிவித்துள்ளனர். வலியே இல்லாமல் தூக்கத்திலேயே குழந்தை பிறக்கும் இந்த வினோத நிகழ்வைக் கண்ட பல கர்ப்பிணிப் பெண்களும், தங்களுக்கும் இதுபோலவே பிரசவம் நடந்தால் நன்றாக இருக்கும் என இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
