அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் (Oracle), செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சுமார் 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தனது கிளவுட் சேவையை மேம்படுத்தவும், அதற்கான நிதிச் சுமையைச் சமாளிக்கவும் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதற்காக ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை மிச்சப்படுத்தி, அந்தப் பணத்தை ஏஐ தொழில்நுட்பம் மற்றும் தரவு மையங்களை உருவாக்கப் பயன்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இந்த நிறுவனம் சுமார் 58 பில்லியன் டாலர் கடனில் இருக்கும் நிலையில், புதிய முதலீடுகளுக்குப் பல நிதி நிறுவனங்கள் கடன் வழங்க மறுத்து வருகின்றன. இதனால் ஊழியர்களைக் குறைத்து அதன்மூலம் கிடைக்கும் மூலதனத்தைக் கொண்டு 2030-ம் ஆண்டிற்குள் தனது இலக்குகளை எட்ட ஆரக்கிள் முயல்கிறது. இந்த மாதத்திலேயே பணிநீக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், உலகெங்கிலும் உள்ள ஐடி ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். டிசிஎஸ் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களைத் தொடர்ந்து ஆரக்கிளின் இந்த நடவடிக்கையும் தொழில்நுட்பத் துறையில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
