முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் ஒன்றான தஞ்சாவூரில் இருந்து, அவரது முக்கிய ஆதரவாளர்கள் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஓபிஎஸ் தரப்பால் நியமிக்கப்பட்ட தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர் சண்முக பிரபு மற்றும் சாமிநாதன் ஆகியோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இவர்களுடன் தஞ்சாவூர் மாநகராட்சி முன்னாள் மன்ற உறுப்பினர்களான செல்லதுரை, ராஜா மற்றும் ஊராட்சி முன்னாள் தலைவர் ஜெகதீசன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் ஈபிஎஸ் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர்.
இந்த திடீர் அரசியல் மாற்றம் ஓபிஎஸ் தரப்பிற்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. கடந்த சில காலங்களாகவே ஓபிஎஸ் அணியில் இருந்து நிர்வாகிகள் விலகி வரும் சூழலில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்றுக்கொண்டது அதிமுகவின் உட்கட்சி அரசியலில் ஈபிஎஸ்-ஸின் கை ஓங்கியுள்ளதையே காட்டுகிறது. தங்களை இணைத்துக் கொண்ட நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து இனிப்புகளை வழங்கி வரவேற்றார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தென் மாவட்டங்களில் நிலவும் இந்த கட்சித் தாவல்கள் அதிமுகவின் பலத்தை மேலும் உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக அக்கட்சியினரால் பார்க்கப்படுகிறது.
