“சட்டசபையில் பொங்கி எழுந்த பிரேமலதா”…. ‘அண்ணன் ஓபிஎஸ்’ கொடுத்த அல்டிமேட் காமெடி பதிலடி… கலகலத்த தமிழக சட்டமன்றம்…!

By Nanthini on ஆவணி 7, 2026

Spread the love

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதத்தின் போது, பிரேமலதா விஜயகாந்த் மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இடையே நடந்த சுவாரசியமான உரையாடல் அவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. கைத்தறி தினத்தை முன்னிட்டு எம்.எல்.ஏ-க்களின் கதர் ஆடையைப் பாராட்டிப் பேசத் தொடங்கிய பிரேமலதா, விஜயகாந்த் கடைசி வரை கதர் ஆடையை உடுத்தியதை நினைவுகூர்ந்தார். தொடர்ந்து பேசிய அவர், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாகவும், திறந்தவெளியில் கிடக்கும் நெல் மணிகளைப் பாதுகாக்க கிடங்குகளை விரைந்து பயன்படுத்த வேண்டும் எனவும் அரசை வலியுறுத்தினார்.

காவிரி, நீட் மற்றும் மேகதாது போன்ற தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளுக்காக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரேமலதா முன்வைத்தார். விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தமிழகப் பிரச்சினைகளுக்காகப் பிரதமரிடம் அனைவரையும் அழைத்துச் சென்றதைச் சுட்டிக்காட்டிய அவர், முதல்வர் தமிழகத்தின் உரிமைக்காகப் போராட வேண்டும் என்றார். மேலும், மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா செல்லவிருந்த தமிழக முதல்வரை அங்கு வர வேண்டாம் என அம்மாநில முதல்வர் கூறியதைக் குறிப்பிட்ட பிரேமலதா, “வந்தாரை வாழவைக்கும் தமிழகத்திற்கு கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் வந்து முதல்வரைச் சந்திக்கலாமே” என்று கேள்வி எழுப்பினார்.

   

சட்டமன்ற உறுப்பினர்களின் வருகையைப் பதிவு செய்ய பயோமெட்ரிக் முறையைக் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட பிரேமலதா, சட்டசபையில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்தும் பேசினார். “அவையில் குடிப்பதற்கு ஒரு பாட்டிலில் தண்ணீர் கேட்டால், அண்ணன் ஓபிஎஸ் அதற்கும் தடை போட்டுவிட்டார்” என்று நகைச்சுவையாகக் கூறினார். நேற்றைய தினம் இதுகுறித்து ஓபிஎஸிடம் கேட்டபோது, அவர் “சும்மா சொன்னேன்மா” எனப் பதிலளித்ததாகவும் பிரேமலதா குறிப்பிட்டார். இதற்குத் தீர்வாக அவையில் தண்ணீர் பாட்டில்களை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

   

பிரேமலதாவின் பேச்சுக்கு உடனடியாகப் பதிலளித்த ஓபிஎஸ் எழுந்து, “தண்ணீர் பாட்டிலுக்கு நான் தடை போட்டதாக அண்ணியார் சொல்கிறார்; ஆனால் நான் அப்படி எந்தத் தடையும் போடவில்லை. நான் கூறிய அந்தக் கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன், சபாநாயகர் இதுகுறித்துத் தக்க முடிவெடுக்கலாம்” எனக் சிரித்தபடி கூறினார். முன்னதாகத் தனியார் மண்டபப் பொதுக்குழுவில் தன் மீது அதிமுகவினர் தண்ணீர் பாட்டில் வீசிய சொந்த அனுபவத்தை நினைவுகூர்ந்து ஓபிஎஸ் பேசியதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஓபிஎஸ் தன் சொந்த அனுபவத்தைச் சொல்கிறார்” எனக் கலாய்க்க, அவையே கலகலப்பானது.