சமையலறையில் ஒளிந்த மனைவி… இரக்கமின்றி கொன்ற கணவன்…. வெப்சீரிஸ் பாணியில் அரங்கேறிய பயங்கரம்…. திடுக்கிடும் பின்னணி…..!

By Nanthini on ஆவணி 7, 2026

Spread the love

கிழக்கு டெல்லியில் சொத்து தகராறு காரணமாக ‘தி ஸ்டேர்கேஸ்’ என்ற வெப் சீரிஸைப் பார்த்துத் திட்டமிட்டு மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த 62 வயது நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கமல் சிங் மற்றும் கோமல் சிங் தம்பதியிடையே குடும்பப் பிரச்சினை மற்றும் சொத்து விவகாரம் தொடர்பாகக் கடந்த ஓராண்டாகவே கடும் மோதல் நிலவி வந்தது. இந்நிலையில், கடந்த ஜூலை 30 அன்று வீட்டில் தனியாக இருந்த கோமலை, கமல் சிங் வாளால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். உயிருக்குப் பயந்து சமையலறையில் ஒளிய முயன்ற கோமலை வெளியே இழுத்து வந்து, கத்தரிக்கோலால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளார்.

கொலைக்குப் பிறகு, இரத்தக் கறைகள் படிந்த ஆடைகள் மற்றும் தாக்குதலுக்குப் பயன்படுத்திய வாள் ஆகியவற்றைப் பையில் மறைத்து எடுத்துக்கொண்டு கமல் சிங் அங்கிருந்து தப்பினார். காவல்துறையின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகத் தனது வங்கிக் கணக்குகளில் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை எடுத்துக்கொண்டு, நேபாளம் மற்றும் மதுரா ஆகிய பகுதிகளை நோக்கித் தப்பியோடினார்.

   

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மூன்று நாட்களாகத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வந்த டெல்லி காவல்துறையினர், இறுதியில் மதுரா ரயில் நிலையம் அருகே வைத்து கமல் சிங்கைக் கைது செய்தனர். அவரிடமிருந்த ரொக்கப் பணம் மற்றும் ஸ்கூட்டரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில், வெப் சீரிஸ் பாணியில் தடயங்களை அழித்துக் குற்றத்திலிருந்து தப்பிக்க முயன்றதாக கமல் சிங் ஒப்புக்கொண்டுள்ளார். சொத்து தகராறில் மனைவியையே கணவன் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.