தமிழக சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின் போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசிய பேச்சு அவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. சட்டப்பேரவையில் பாம்புக்கடி மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நீண்ட நேரமாக விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார். இதைக் குறிப்பிட்ட ஓ.பன்னீர்செல்வம், “பல்வேறு தொகுதிகளில் பாம்புக்கடி பாதிப்பு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. இதனால் அந்தத் தொகுதிகளில் ஏதோ தோஷம் இருப்பதாகவே கருதுகிறேன்; எனவே, அந்தத் தொகுதிகளில் இருக்கும் நாகதோஷத்தைக் கழிப்பதற்கு ஏதேனும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை முன்வருமா?” என்று நகைச்சுவையாகக் கேள்வி எழுப்பினார்.
ஓ.பி.எஸ்-ன் இந்த கலகலப்பான கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் உடனடியாகப் பதிலளித்தார். “நமது முதலமைச்சர் தலைமையிலான அரசு எப்போதும் அறிவியல்பூர்வமாக மட்டுமே செயல்படும். தோஷம், பில்லி, சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளில் இந்த அரசிற்கு எவ்வித நம்பிக்கையும் கிடையாது” என்று அவர் அறுதியிட்டுக் கூறினார். நாகதோஷம் பற்றிய ஓ.பி.எஸ்-ன் நகைச்சுவையான கேள்வியும், அதற்கு அமைச்சரின் தர்க்கரீதியான பதிலும் சட்டப்பேரவையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரையும் கலகலப்படையச் செய்து, அவையில் சிரிப்பலையை உண்டாக்கியது.
