தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாடோடு செயல்பட்டு வருகின்றது. இருந்தாலும் தங்கள் கூட்டணி பலமாக இல்லாததால் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அதிமுக உடைந்து கிடக்கும் நிலையில் அனைவரும் ஒன்று சேர்ந்தால் கட்டாயம் வெற்றி கிடைக்கும் என ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் இபிஎஸ் தனி ஆளாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், தேர்தலில் அதிமுகவிற்கு மட்டுமே வாக்கு கேட்பேன். எனக்கென்று தனி இலக்கு எதுவும் கிடையாது. அதிமுக ஆட்சியில் அமர வேண்டும் என்பதே என் இலக்கு. பிரிந்து இருக்கும் அனைவரும் சேர்ந்து போட்டியிட்டால் மட்டுமே அதிமுக ஆட்சி அமைக்கும். முதல்வர் வேட்பாளராக பழனிச்சாமியை பாஜக ஏற்றாலும் மக்கள் தான் அதை தீர்மானிப்பார்கள். விஜயின் பேச்சு ஈர்ப்பதாக இல்லை. அவருடைய பேச்சில் அரசியல் கருத்துக்கள் எதுவும் கிடையாது. மாநாட்டில் அவர் பேசியது தமாசாக இருந்தது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
