தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதே தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. இந்த முறை எப்படியாவது அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற சிந்தனையில் இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஆனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று பாஜக சொல்லிக் கொண்டிருக்க ஈபிஎஸ் தான்தான் முதல்வர் வேட்பாளர் என மறுபக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதேசமயம் கூட்டணி வேண்டுமா, வேண்டாமா என்பதை தாங்கள்தான் முடிவு செய்வோம் என்றும் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
இப்படியான நிலையில் கூட்டணி ஆட்சி என்று பாஜகவினரும் தனித்து ஆட்சி என்று அதிமுகவினரும் கூறி வருகிறார்கள். இதனால் அதிமுக மற்றும் பாஜக இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகின்றது. இப்படியான நிலையில் அதிமுகவுடன் மீண்டும் இணைய வேண்டும் என்ற ஓபிஎஸ் அழைப்பை இபிஎஸ் முழுமையாக நிராகரித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தூத்துக்குடிக்கு வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டுள்ளார். இந்த சந்திப்புக்குப் பிறகு முக்கிய முடிவை அவர் அறிவிப்பதாக தெரிகிறது. குறிப்பாக அதிமுகவுடன் இணையவில்லை என்றால் பாஜக சார்பில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
