அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் மீண்டும் அக்கட்சியில் இணைவதே தனது விருப்பம் எனத் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தன்னால் உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகளை ஒன்றிணைக்க பாஜக விரும்புவதையே நயினாரின் இந்த கருத்து பிரதிபலிப்பதாகப் பார்க்கப்படுகிறது.
நயினார் நாகேந்திரனின் இந்தக் கருத்துக்குப் பதிலளித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைத்தாலும் ஓபிஎஸ் ஒருபோதும் அதிமுகவிற்குச் செல்லமாட்டார் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டிப் புதிய கூட்டணிகள் உருவாகி வரும் சூழலில், அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்துப் பிற கட்சித் தலைவர்கள் தெரிவிக்கும் இக்கருத்துகள் விவாதங்களைக் கிளப்பியுள்ளன.
