தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு இடையே ஒரே நாளில் 11 கொலைகள் நிகழ்ந்துள்ளதாக வெளியான செய்திகள் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த வன்முறைச் சம்பவங்களில், திருச்சியில் அதிகபட்சமாக 3 கொலைகளும், சிவகங்கையில் 2 கொலைகளும் நிகழ்ந்துள்ளன. மேலும் தேனியில் போதை கும்பலை தட்டிக்கேட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அடித்துக் கொல்லப்பட்டதோடு, சென்னை, கடலூர், திண்டுக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் தலா ஒரு கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
இந்தக் கொடூர சம்பவங்களை முன்னிட்டு, தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாகச் சாடி வருகின்றன. இதுகுறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது எக்ஸ் தளப் பதிவில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 11 கொலைகள் நடந்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தேனியில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர், திருவள்ளூரில் ஓர் இளம்பெண், சமயபுரத்தில் இரு சிறார்கள், திருச்சியில் ஓர் ஐடி ஊழியர் எனப் பல மாவட்டங்களில் உயிர்கள் பறிபோயுள்ளன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தமிழக அரசைச் சாடியுள்ள கனிமொழி எம்பி, “ஒருபுறம் மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்க, இந்த மனிதாபிமானமற்ற ஆட்சியில் மறுபுறம் உயிர்களை இழந்த குடும்பங்களில் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது” என வேதனை தெரிவித்துள்ளார். மேலும், “இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோனாலும், திரைக் கவர்ச்சியால் கிடைத்த வெற்றி தந்த அகந்தையில் வாழும் முதலமைச்சர் விஜய் வாய் திறக்கப்போவதில்லை” என்று தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் மௌனத்தைக் கடுமையாக விமர்சித்துள்ள அவர், “முதலமைச்சர் அவர்களே, மக்கள் எல்லாவற்றையும் எப்போதும் சகித்துக்கொண்டே இருப்பார்கள் என்று நினைத்துவிடாதீர்கள்!” என எச்சரித்துள்ளார்.
