சட்டப்பேரவையில் மாநிலத்தின் சட்ட-ஒழுங்கு பிரச்சனை மற்றும் தவெகவினர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், திமுக ஆட்சியைக் குறித்தும் சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசா (MISA) காலகட்டம் பற்றியும் விமர்சித்துப் பேசினார். முதலமைச்சரின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாகப் பதிலளிக்கத் வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்குக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார். சட்ட-ஒழுங்கு தொடர்பான நேரடி கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், முதலமைச்சர் சுமார் 45 நிமிடங்கள் எவ்வித ஆதாரமும் இல்லாத பொய்களை மட்டுமே அவையில் அடுக்கினார் என்று குற்றம்சாட்டினார். மேலும், எந்தவித தவறும் நடக்கவில்லை எனச் சர்க்காரியா கமிஷனே தெளிவாக அறிக்கை அளித்துள்ள நிலையில், அதுகுறித்தும் மிசா குறித்தும் பேசுவதற்கு முதலமைச்சர் விஜய்க்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும் அவர் காரசாரமாகச் சாடினார்.
முதலமைச்சரின் பதிலுரையை “ரீல்ஸ்களுக்காக மட்டுமே நிகழ்த்தப்பட்ட உரை” என்று விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர், அவர் முன்வைத்த எந்தவொரு கேள்விக்கும் தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை என்றார். கடந்த வாரம் அவகாசம் கேட்ட முதலமைச்சர், ஒப்புவித்தல் போட்டியைப் போல மனப்பாடம் செய்து, சினிமா வசனங்களையும் பஞ்ச் டயலாக்குகளையும் அவையில் பேசிச் சென்றதாகக் கூறினார். கொடநாட்டில் தனது திரைப்பட படப்பிடிப்பிற்காக வாட்ச்மேன் வேலை பார்த்த ஒருவர், தியாக வரலாறு கொண்ட திமுக தலைவர்களைப் பற்றிப் பேசுவது ஏற்புடையதல்ல என்றும் அவர் விமர்சித்தார்.
தொடா்ந்து பேசிய அவர், முதலமைச்சர் விஜய்யின் அரசியல் வருகையும் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியதும் ஒரு தற்செயலான விபத்துதான் என்று கடுமையாகத் தாக்கினார். எதிர்க்கட்சியினர் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் 1970-களின் வரலாற்றிற்குச் சென்று மடைமாற்றம் செய்ய முயல்வதாகவும், யாரோ எழுதித் தந்த அறிக்கையை அவையில் வந்து பேசியுள்ளார் என்றும் கூறி, சட்டப்பேரவையின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதாகத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
