தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் மற்றும் மதுப் பயன்பாடு குறித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு, தற்போதைய முதலமைச்சரை சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். கோவையில் போதைப்பொருள் கும்பலை காவல்துறையிடம் காட்டிக்கொடுத்த மாணவர் அமுதன் அடித்துக்கொல்லப்பட்டதையும், அதைத் தொடர்ந்து சென்னை திருவொற்றியூரில் தினேஷ் என்ற மாணவன் சக மாணவர்களால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள், மாநில காவல்துறையின் செயல்பாட்டை கேள்விக்குறியாக்கி உள்ளதோடு, மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் நீட் பயிற்சிக்குச் சென்ற மாணவிகள் வகுப்பறையிலேயே மது அருந்திய நிகழ்வையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளுங்கட்சியினரே காவல்துறையின் துணையோடு கல்வி நிலையங்களில் தடையின்றி போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள அப்பாவு, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களைத் தேடி மருத்துவத்தைக் கொடுத்தார், ஆனால் நீங்களோ மாணவர்களைத் தேடி மதுவைக் கொடுக்கிறீர்கள் என்று விமர்சித்துள்ளார். கல்லூரிகளும் வகுப்பறைகளும் போதைப்பொருள் மற்றும் மது விற்பனை மையங்களாக மாறி வரும் நிலையிலும், முதலமைச்சர் மௌனம் காப்பது ஏன் எனவும் அவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
