தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வரும் 30-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு, வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் விளம்பரங்கள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ. குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து விதமான பிரச்சார நடவடிக்கைகளுக்கும் ‘Suvidha’ (சுவிதா) செயலி மூலம் முறையாக அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், வாகனப் பிரச்சாரம், ஒலிபெருக்கி பயன்பாடு மற்றும் தற்காலிக கட்சி அலுவலகம் அமைத்தல் போன்றவற்றுக்கு இச்செயலி வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பிரச்சாரம் தொடங்குவதற்கு குறைந்தது 48 மணிநேரத்திற்கு முன்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். சாலைக் காட்சிகள் (Road Show), விளம்பரப் பதாகைகள், கொடிகள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்களுக்கான வாகன அனுமதி உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளுக்கும் இந்த ஒற்றைச் சாளர முறை பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் காவல்துறை, தீயணைப்புத் துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளின் தடையின்மைச் சான்று (NOC) பெற்ற பின்னரே பரிசீலிக்கப்படும். உரிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதோடு, அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்படும். சென்னையில் இதுவரை பெறப்பட்ட 816 விண்ணப்பங்களில் 408 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை பரிசீலனையில் உள்ளதாகவும் குறிப்பிட்ட ஆணையர், தேர்தல் நடத்தை விதிகளை முறையாகப் பின்பற்றி ஒத்துழைப்பு நல்குமாறு அரசியல் கட்சிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்
