தேதி குறிச்சாச்சு.. ரேஷன் கார்டு பிரச்சினைகளுக்கு ஒரே நாளில் தீர்வு.. தமிழக அரசின் அதிரடி முகாம்..!!

By Muthu Mani on ஆனி 11, 2026

Spread the love

தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், குடும்ப அட்டைகளின் வகைகளுக்கு ஏற்ப அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய அத்தியாவசியப் பொருட்களைப் பொதுமக்களுக்குக் குறைந்த விலையிலும், அரிசி போன்ற சில முக்கியப் பொருட்களை முற்றிலும் இலவசமாகவும் ரேஷன் கடைகள் மூலம் தடையின்றி வழங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் ஜூன் 13 ஆம் தேதி ரேஷன் கார்டு குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த முகாம்களில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் கைபேசி எண் பதிவு அல்லது மாற்றம் செய்தல் போன்ற சேவைகளுக்குப் பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பித்து ஒரே நாளில் தீர்வு பெறலாம். மேலும், நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் குறைபாடுகள் குறித்தும் புகார்களை அளித்து விரைவான தீர்வுகளைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு நேரில் வர இயலாத மூத்த குடிமக்களுக்கு இந்த முகாமில் அங்கீகாரச் சான்று வழங்கப்படும், இதன் மூலம் அவர்களின் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும். மேலும், மூத்த குடிமக்களுக்குப் பதிலாகப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் நாமினி நியமனத்திற்கும் இங்கு விண்ணப்பிக்கலாம். இச்சேவைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் மூலமாகவே மேற்கொள்ளப்படும் என்பதால், பொதுமக்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் போனுடன் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.