இனி சொந்த வீட்டின் முன் கார் நிறுத்தினாலும் ரூ.25,000 கட்டணமா?…. பெங்களூருவாசிகளுக்கு இடி போல் வந்த அறிவிப்பு….!

By Nanthini on ஆவணி 15, 2026

Spread the love

பெங்களூரு நகரில் கட்டுப்பாடின்றி சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண கிரேட்டர் பெங்களூரு ஆணையம் புதிய வரைவு திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி, சாலைகளில் ஆங்காங்கே இலவசமாக வாகனங்களை நிறுத்தும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. இதற்காக நகரத்தின் முக்கிய சாலைகள் ‘ஏ, பி, சி’ என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, கார்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு முறையே ரூ.80, ரூ.60 மற்றும் ரூ.40 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், இரண்டு மணி நேரத்திற்கு மேல் நிறுத்தப்படும் கார்களுக்கு ஒன்றரை மடங்கு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

வீட்டின் முன் சொந்தக் கார்களை நிறுத்துவதற்கும் இனி ஆண்டுதோறும் கணிசமான தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டி வரும். அதன்படி சிறிய கார்களுக்கு ரூ.15,000, செடான் ரகக் கார்களுக்கு ரூ.20,000 மற்றும் எஸ்.யு.வி (SUV) கார்களுக்கு ரூ.25,000 என ஆண்டுதோறும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டின் முன் காரை நிறுத்தும் போது மற்ற வாகனங்கள் இடையூறின்றிச் செல்ல போதுமான இடவசதி உள்ளதா என்பதை ஜி.பி.ஏ. மார்ஷல்கள் நேரில் ஆய்வு செய்து சான்றளித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும். பொது இடங்களுக்குப் பதிலாக வாகன நிறுத்த வளாகங்களை பயன்படுத்துவோருக்கு மாதக் கட்டணமாக கார்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.4,000 வரையிலும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரையிலும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

   

அதேவேளையில், இரவு நேரங்களில் (இரவு 8:00 முதல் காலை 8:00 மணி வரை) வாகனங்களை நிறுத்துவோருக்கு மாதக் கட்டணத்தில் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரில் காலியாக உள்ள நிலங்களை உரிமையாளர்களோ அல்லது பொதுமக்களோ வாகனப் நிறுத்துமிடங்களாக மாற்ற முன்வந்தால், அந்த நிலங்களுக்குப் பெறப்படும் சொத்து வரியிலிருந்து 35 ஆண்டுகள் வரை விலக்கு அளிக்கப்படும் என்றும் ஆணையம் அறிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சீரான வாகன இயக்கத்தை உறுதி செய்யவும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த வரைவு அறிக்கை குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்; அவசியமான பரிசீலனைகளுக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.