மதுரை மாவட்டம் எழுமலை கோட்டைப்பட்டியைச் சேர்ந்த காவலர் மகாலிங்கம் 2023ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சிறப்பு காவல்படையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று அதிகாலை, அவர் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது, யாரும் எதிர்பாராதவிதமாகத் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார்.
இந்தச் சத்தம் கேட்டு விரைந்து வந்த சக காவலர்கள், மகாலிங்கத்தை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், காவலர் மகாலிங்கம் பணிச்சுமை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது காதல் விவகாரமா என்று பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீசார் கைப்பற்றிய தற்கொலைக் கடிதத்தில், “தன்னுடைய மரணத்திற்கு யாரும் காரணமில்லை” என்று மகாலிங்கம் எழுதி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
