மகாராஷ்டிரா அரசு ஒரு முக்கிய நடவடிக்கையாக, இனிமேல் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு ஆதார் அட்டையைச் சான்றாக எடுத்துக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளது. இதன் மூலம், போலிச் சான்றிதழ்கள் வழங்குவதைத் தடுக்க அம்மாநில அரசு முயற்சி எடுத்துள்ளது.
இதுதொடர்பாக, மகாராஷ்டிர வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே, ஆதார் அட்டையின் அடிப்படையில் வழங்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான மற்றும் போலிச் சான்றிதழ்களை உடனடியாக ரத்து செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், போலியான ஆவணங்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிறப்பு அல்லது பிறந்த இடத்திற்கான சான்றாக ஆதார் அட்டையைக் கருத முடியாது என்று வருவாய்த்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் 16 அம்சச் சரிபார்ப்பு முறையைப் பயன்படுத்திச் சான்றிதழ்களை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலி மற்றும் மோசடிச் சான்றிதழ்களை ஒருபோதும் மாநிலத்தில் அனுமதிக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக அமைச்சர் பவன்குலே தெரிவித்துள்ளார்.
