சென்னையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, அதிகாலை வேளையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பேருந்திலிருந்த 25-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததே விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
