“ப்ரோ யாரிடமும் சொல்லிடாதீங்க”…. தனிஷ்க் கொள்ளையன் நிஷாந்த் கெஞ்சிய தருணம்…. ஆம்னி பஸ் கிளீனர் சொன்ன திகில் பின்னணி…..!

By Nanthini on கார்த்திகை 17, 2026

Spread the love

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான நிஷாந்த், தருமபுரி அருகே காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். பெங்களூருவிலிருந்து அவர் பயணித்த ஆம்னி பேருந்தின் கிளீனர் மற்றும் ஓட்டுநரின் சாதுரியமான நடவடிக்கையாலேயே நிஷாந்த் சிக்கியுள்ளார். இது குறித்துப் பேசிய பேருந்து கிளீனர், பெங்களூருவில் முகக்கவசம் மற்றும் தொப்பி அணிந்தபடி நிஷாந்த் பேருந்தில் ஏறியதாகவும், அவருடன் வந்த நண்பர்கள் உணவு மற்றும் தேநீர் செலவுக்காக ரூ.500 கொடுத்து அவரைக் கவனித்துக்கொள்ளுமாறு கூறி வழியனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பயணத்தின் போது ராயக்கோட்டை புறவழிச்சாலையில் பேருந்து நிறுத்தப்பட்டிருந்த சமயத்தில், தன்னிடம் செல்போன் இருந்தபோதிலும் நிஷாந்த் கிளீனரின் செல்போனை வாங்கி யாரிடமோ, “நான் நிஷாந்த் பேசுகிறேன்” எனப் பேசியுள்ளார். இது கிளீனருக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிது நேரத்தில் நிஷாந்த் தனது முகக்கவசம் மற்றும் தொப்பியைக் கழற்றியபோது, அவர் மதுரையைச் சேர்ந்தவரா என கிளீனர் விசாரித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நிஷாந்த், தன்னை யாரிடமும் காட்டிக்கொடுக்க வேண்டாம் என ஓட்டுநர் மற்றும் கிளீனரிடம் கெஞ்சியுள்ளார்.

   

சட்டச் சிக்கல்களுக்கு அஞ்சிய பேருந்து ஓட்டுநர், தருமபுரி அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் தனது நண்பரான காவலருக்குத் தகவல் கொடுத்துள்ளார். காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி, அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு தேநீர்க்கடையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநரும் கிளீனரும், பேருந்தின் கதவுகளை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு தேநீர் அருந்துவது போல் காத்திருந்துள்ளனர்.

   

சந்தேகமடைந்த நிஷாந்த் உள்ளேயிருந்து கதவைத் தட்டியதோடு, ஓட்டுநர் இருக்கைக்கு அருகிலுள்ள ஜன்னல் வழியாக வெளியே குதித்துத் தப்ப முயன்றுள்ளார். ஆனால், அங்கு ஏற்கனவே தயார் நிலையில் மறைந்திருந்த காவல்துறையினர் அவரைச் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். காவல்துறையினரின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டதோடு, நிஷாந்தின் நண்பர்கள் கொடுத்த 500 ரூபாயையும் தாங்கள் தர்மமாகக் கொடுத்துவிட்டதாகப் பேருந்து கிளீனர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.