மும்பையின் கொலாபாவில் உள்ள புகழ்பெற்ற மெக்டொனால்ட்ஸ் உணவகத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் வணிக உரிமத்தை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் உடனடியாகப் அமலுக்கு வரும் வகையில் சஸ்பெண்ட் செய்துள்ளது. மகாராஷ்டிராவின் உணவுப் பாதுகாப்புத் துறையின் ஆணையர் துகாராம் முண்டே தலைமையிலான குழுவினர் நடத்திய அதிரடி ஆய்வில், இந்த உணவகத்தில் கடுமையான சுகாதாரக் குறைபாடுகள் மற்றும் பூச்சித் தொல்லைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதிகாரிகள் நடத்திய ஆய்வின் போது, சமையலறையில் உயிருள்ள கரப்பான்பூச்சிகள் சுற்றித் திரிந்தது, அழுகிய உணவுப் பொருட்கள் திறந்தவெளியில் கிடந்தது, முறையான குளிர்பதனப் பெட்டி வசதிகள் இல்லாதது மற்றும் தூசி படிந்த விளக்குகள் உணவு தயாரிக்கும் இடத்தின் மேல் பாதுகாப்பு இன்றி இருந்தது போன்ற பல விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. மேலும், ஊழியர்கள் அழுக்கடைந்த காலணிகள் மற்றும் துணிகளைக் கையாண்ட பிறகு கைகளைக் கழுவாமல் உணவைத் தொட்டதும், ‘சீஸ்’ தொடர்பாக தவறான லேபிள்களைப் பயன்படுத்தியதும் வெளிச்சத்திற்கு வந்தது.
முன்னதாக எஃப்டிஏ சுட்டிக்காட்டிய 20 முக்கிய சுகாதாரக் குறைபாடுகளில், 18 தவறுகளை இந்த உணவகம் சரிசெய்யாமல் அலட்சியமாக இருந்தது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. உணவக நிர்வாகம் 148 பக்கங்கள் கொண்ட அறிக்கை அளித்து குறைகள் சரிசெய்யப்பட்டுவிட்டதாகக் கூறிய போதிலும், நேரடி ஆய்வில் உண்மையான நிலைமை மாறவில்லை என்பது தெரியவந்ததால், இந்த கிளை தற்காலிகமாக மூடப்பட்டு இதன் உணவு விற்பனை மற்றும் விநியோகத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
