தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் பாமகவில் நாளுக்கு நாள் உட்கட்சி பூசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தந்தைக்கு மகனுக்கும் ஏற்பட்ட தலைமை போட்டியால் பாமக தற்போது இரண்டாக பிரிந்து கிடக்கிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் ராமதாஸ் பக்கமும் இளைஞர்கள் அன்புமணி பக்கமும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நடுநிலையில் இருக்கும் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் திணறுகிறார்கள். இந்த சண்டை தற்போது உச்சத்தை எட்டிய நிலையில் இருவரும் மாறி மாறி அவர்களை எதிர்ப்பவர்களை கட்சியிலிருந்து தொடர்ந்து நீக்கி வந்தனர். இப்படியான நிலையில் கட்சியை நிறுவனர் ராமதாஸ் இனி அன்புமணிக்கு கட்சியில் இடம் இல்லை, வேண்டுமென்றால் தனி கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும் என்று கூறி பரப்பரப்பை கிளப்பி இருந்தார்.
இந்நிலையில் 2026 தேர்தல் கூட்டணி குறித்து டிசம்பர் 30-ஆம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் அறிவிக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மகள் காந்திமதி உட்பட முக்கிய நிர்வாகிகளை அழைத்து தைலாபுரத்தில் அவர் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே பாமகவை ஒருங்கிணைத்து கூட்டணியில் சேர்க்க பாஜக முற்படுவதாக கூறப்படுகிறது. எனவே ராமதாசும் NDA கூட்டணியை தான் தேர்ந்தெடுப்பார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
