எஸ்.ஐ.ஆர் முறைகேடுகளுக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வரும் நவம்பர் 1-ஆம் தேதி டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ள பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்களைத் திரட்டுவது தொடர்பாகத் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் பெரும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. டெல்லி போராட்டத்தை முன்னிட்டுத் தமிழகத்தில் இருந்து சுமார் 2,000 நிர்வாகிகளை அழைத்து வர வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்தபட்சம் 50 பேரை டெல்லிக்குக் கூட்டி வர வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூருக்குக் கட்சித் தலைமை உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து மாணிக்கம் தாக்கூர் மாவட்டத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியபோது, “மாவட்டத்திலிருந்து 50 பேரை டெல்லிக்கு அழைத்துச் செல்ல ரயிலில் டிக்கெட் கிடைக்காது, விமானக் கட்டணம், ஹோட்டல் அறை வாடகை, 3 நாள் உணவுச் செலவு எனப் பல லட்சங்கள் ஆகும். அந்த அளவுக்குத் தங்களிடம் பொருளாதார வசதி இல்லை, செலவைக் கட்சியே ஏற்றுக்கொண்டால் ஆட்களை அழைத்து வருகிறோம்” என்று மாவட்டத் தலைவர்கள் வெளிப்படையாகவே மறுத்துவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கம் தாக்கூர், “பதவி மட்டும் வேண்டும், தலைமை உத்தரவிட்டால் ஆயிரம் காரணம் சொல்கிறீர்களா?” எனக் கடிந்துகொண்டதால் கோபமடைந்த மாவட்ட தலைவர்கள், “எங்களுக்கு மாவட்டத்தில் கட்சி வளர்க்கத்தான் பதவி தரப்பட்டது. 75 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகித்தும், 2 அமைச்சர்கள் இருந்தும் நிர்வாகிகளுக்கு என்ன பலன் கிடைத்தது?” எனத் திரும்பக் கேள்வி எழுப்பி சத்தியமூர்த்தி பவனில் காரசாரமாக விவாதித்தனர். இதையடுத்துப் பேச்சைத் துண்டித்துக் கொண்ட மாணிக்கம் தாக்கூர், கட்சி மேலிட உத்தரவை எப்படி நிறைவேற்றுவது என்று புலம்பியபடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
