“எதுக்கு டீ ரீல்ஸ் பாக்குற”… இரவோடு இரவாக மனைவியைப் பீர் பாட்டிலால் குத்திக் கொன்ற கணவன்…. பெங்களூரில் அரங்கேறிய கொடூரம்….!

By Nanthini on புரட்டாதி 10, 2026

Spread the love

பெங்களூரு விபூதிபுரா பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது மனைவியைப் பீர் பாட்டிலால் குத்திக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபூதிபுராவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ராகவேந்திரா (38) என்பவரும், அருகில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வீட்டுவேலை செய்துவந்த அவரது மனைவி ஸ்ருதியும் (30) கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படிக்கும்போதே காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு பெங்களூருவில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஸ்ருதி அடிக்கடி செல்போனைப் பயன்படுத்திச் சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பார்த்து வந்ததை ராகவேந்திரா தொடர்ந்து கண்டித்து வந்ததால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராகவேந்திரா, உடைந்த பீர் பாட்டிலால் ஸ்ருதியின் வயிற்றில் சரமாரியாகக் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியைக் கொன்ற குற்ற உணர்ச்சியிலும் அதிர்ச்சியிலும் ராகவேந்திராவும் வீட்டிற்குள்ளேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

   

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எச்.ஏ.எல் காவல்துறையினர், இருவரது உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஒரே நாளில் தாய், தந்தை இருவரையும் பறிகொடுத்து அநாதரவாக நின்ற இரு குழந்தைகளும் தற்போது தாவணகெரேயில் உள்ள தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.