மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அணுக்கனிம சுரங்கத் திட்டம்… தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்… மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு…!
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் 1,144 எக்டேர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு, தமிழக அரசு அவசர அவசரமாக அரசாணை பிறப்பித்துத் துணை போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் மாவட்ட மக்களின் மிகக் கடுமையான எதிர்ப்பையும் மீறி, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் மாநில அரசு செயல்பட்டிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது விரிவான அறிக்கையில் மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.
இந்தத் திட்டத்தின் பின்னணியை ஆராய்ந்தால், மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான ‘இந்திய அருமணல் ஆலைக்கு’ தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்குவதற்காகவே இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. இதற்காக கிள்ளியூரைச் சுற்றியுள்ள கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை உள்ளிட்ட பல கிராமங்களில் மொத்தம் 1817 எக்டேர் பரப்பளவில் சுரங்கம் அமைக்க 2015-ல் மத்திய அரசு முடிவெடுத்தது. அதில் 1144 எக்டேர் நிலத்திற்கு கடந்த 2020-ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்த தமிழக அரசு, தற்போது அதன் காலக்கெடுவை நீட்டித்து மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்துள்ளது.
முன்னதாக, 2024 அக்டோபரில் இத்திட்டத்திற்காக நடத்தப்படவிருந்த பொதுமக்களின் கருத்துக்கேட்புக் கூட்டம் மக்களின் கடும் எதிர்ப்பால் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், அணுக்கனிம சுரங்கங்களை அமைப்பதில் உறுதியாக இருந்த மத்திய அரசு, 2025-ஆம் ஆண்டில் ஒரு புதிய ஆணையைப் பிறப்பித்தது. அதன்படி, தோரியம், யுரேனியம், மோனசைட் போன்ற அணுக்கனிமங்களைத் தோண்டுவதற்கு பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தத் தேவையில்லை என்றும், அதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை இனி மத்திய அரசே நேரடியாக வழங்கும் என்றும் விதிகளை மாற்றியமைத்தது.
பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு, இதற்கான ஐந்தாண்டு நில ஒதுக்கீட்டு ஆணை காலாவதியாகிவிட்டது என்று அனைவரும் நினைத்திருந்த வேளையில், தமிழக அரசு ஒரு அதிர்ச்சி தரும் நடவடிக்கையை எடுத்துள்ளது. நில ஒதுக்கீடு முடிவடையும் கடைசி நாளான ஜூன் 10, 2026 அன்று, தனது பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி மேலும் ஓராண்டுக்கு இத்திட்டத்திற்கான காலக்கெடுவை நீட்டித்து விடிய விடிய அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் இந்திய அருமணல் ஆலை இன்னும் சில அனுமதிகளை மட்டும் பெற்று எளிதாகச் சுரங்கத்தை அமைத்துவிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கிள்ளியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் ஏற்கனவே அதிக அளவிலான அணுக்கதிர்வீச்சு நிலவும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. மணவாளக்குறிச்சி ஆலையினால் அங்குள்ள மக்களுக்குப் புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தோல்நோய் மற்றும் கருச்சிதைவு போன்ற கொடிய பாதிப்புகள் ஏற்பட்டு வரும் சூழலில், புதிய சுரங்கமும் வந்தால் ஒட்டுமொத்த தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமும் உடல்நலமும் சரிசெய்ய முடியாத அளவுக்குப் பேரழிவைச் சந்திக்கும். எனவே, மக்களின் விருப்பத்திற்கு மாறாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நில ஒதுக்கீட்டு நீட்டிப்பு அரசாணையைத் தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவின் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பாக விளங்கி வந்த 'மகாத்மா காந்தி தேசிய…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களால் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும்…
மாதத்தின் தொடக்கத்திலேயே நகைப் பிரியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 1) தங்கம் விலை மளமளவெனக் குறைந்துள்ளது.…
தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு, கன்னியாகுமரி மாவட்ட அணுக்கனிம…
தமிழகத்தின் முழுநேர ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி அண்மையில் மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து, கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர…
தமிழகத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத தவெக கூட்டணி அரசுக்கு காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்து வருகின்றன. இதில்,…