தமிழக அரசியலில் அண்மைக் காலமாக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையேயான கருத்து மோதல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. முன்னதாக கரூரில் நடந்த தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விஜய் முதலமைச்சரான பிறகு அக்குடும்பத்தினரில் 31 பேருக்கு அரசு வேலை வழங்கி உத்தரவிட்டார். ஆனால், தகுதியுடைய லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் வேளையில், விதிகளை மீறி இவ்வாறு பணி நியமனம் வழங்கக் கூடாது என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கெதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், விஜய் அரசு வழங்கிய அந்த பணி நியமனங்கள் செல்லாது என்றும், தேவைப்பட்டால் தற்காலிகப் பணிகளை வழங்கலாம் என்றும் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்தது.
நீதிமன்றத்தின் இத்தீர்ப்பைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் வெடித்தன. இந்த சூழலில், நடிகர் கூல் சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுச் சீமானைக் கடுமையாக விமர்சித்திருந்தார். அதில், “கரூர் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அரசு வேலையைக் கெடுத்துவிட்டீர்களே சீமான் அண்ணே, இனி நீங்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு கரூருக்குச் சென்று ஓட்டு கேட்பீர்கள்? மக்கள் உங்களைத் தவறாகப் பேசுவார்கள்” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கூல் சுரேஷின் கேள்விகளுக்குத் தனது பாணியில் ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசுகையில், “ஒருவன் கேட்கிறான், நான் எப்படி கரூருக்குப் போய் ஓட்டு கேட்பேன் என்று. இதற்கு முன்னாடி மட்டும் என்ன கரூரில் எனக்கு இரண்டு, மூன்று முறை வாக்களித்தா கிழித்துவிட்டார்கள்? போடா டேய் பைத்தியக்காரா… நீ ஓட்டு போடு, போடாமல் போ, அதைப்பற்றி எனக்கு என்ன கவலை” என மிகவும் காரசாரமாகப் பேசியுள்ளார். விஜய்யின் இந்த நடவடிக்கை மற்றும் அதற்குச் சீமான் கொடுத்த பதில் ஆகியவை தற்போது தமிழக அரசியல் களத்தில் மேலும் சூட்டைப் கிளப்பியுள்ளது.
