தமிழகம் முழுவதும் 4829 டாஸ்மார்க் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் நாள் ஒன்றுக்கு ரூ. 110 கோடிக்கும், பண்டிகை காலங்களில் ரூ. 250 கோடிக்கும் மது விற்பனை நடக்கிறது. அதாவது தினம்தோறும் 70 லட்சம் மது பாட்டில்கள் டாஸ்மார்க் கடைகளில் விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மது பாட்டில்களைக் குடிமகன்கள் வனப்பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் வீசி செல்கின்றனர். அந்த மது பாட்டில்களைச் சாலைகளில் வீசி செல்வதால், மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பெரும் பாதிப்பு விளைகிறது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் காலி மது பாட்டல்களை திரும்ப பெறுவதற்கான திட்டத்தை அமல்படுத்துமாறு டாஸ்மார்க் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். இல்லையெனில், மலைப்பிரதேசங்களில் மதுபானங்களை விற்க தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதை தொடர்ந்து கொடைக்கானல் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மதுபாட்டல் ஒன்றுக்கு ரூ. பத்து கூடுதலாக வசூலிக்கப்பட்டு, காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது, அந்தத் தொகை திரும்ப தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் நிலையில், மதுரை, சிவகங்கை, திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு டாஸ்மார்க் தொழிலாளர் சங்கங்கள் கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலான கடைகள் 10 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டவையாக உள்ள நிலையில், அவற்றில் மது பாட்டில்களை வைக்கவே போதிய இடம் இல்லாத பொழுது, காலி மது பாட்டல்களை எங்கே வைப்பது? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
