தலைநகர் டெல்லியின் விகாஸ் நகர் பகுதியில் கும்பல் மோதல் காரணமாகப் பிரபல குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரான்ஹவுலா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மோனிஷ் என்பவரைத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுவிட்டுத் தப்பியோடினர். படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பல குற்றப் பின்னணிகளைக் கொண்ட நபர்களுக்கு இடையேயான முன்விரோதமே இக்கொலைக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
கொலையாளிகள் அங்கிருந்து உடனடியாகத் தப்பியோடிவிட்ட நிலையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமரா பதிவுகளைக் கைப்பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மோனிஷ் மீது ஏற்கனவே சுமார் பத்து குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை அடையாளம் கண்டு, அவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
