தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தான் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளைப் பரப்பி வருவதாகவும், திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட விரும்புவதாகத் தமிழக வெற்றிக் கழகத்திடம் (தவெக) தான் கூறவில்லை என்றும் விளக்கமளித்தார். மேலும், மக்களின் ஆதரவோடு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு ஐந்து ஆண்டுகள் முழுமையாகத் தொடர வேண்டும் என்பதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் திடீர் ராஜினாமா முடிவு ஆரோக்கியமானது அல்ல என்று விமர்சித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் திடீரென தங்களது பதவிகளைத் துறக்கும் சூழல் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல எனக் குறிப்பிட்ட அவர், எந்தப் பின்னணியில் அவர்கள் இந்த முடிவை எடுத்தார்கள் என்று தெரியவில்லை என்றாலும், இதை அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது என்றார். அத்துடன், என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முயற்சியை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், மெல்ல மெல்ல பொதுத்துறையைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு வலுவான குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
