“3 இல்லை 5!”.. எடப்பாடிக்கு செக் வைத்த கிருஷ்ணசாமி… அதிமுக கூட்டணியில் திடீர் முட்டுக்கட்டை?

By Muthu Mani on பங்குனி 19, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பலத்த சவாலை விடுக்கும் வகையில், எதிர்க்கட்சியான அதிமுக தனது கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது. தற்போது வரை பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கட்சிகளைத் தனது அணியில் இணைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, தொகுதிப் பங்கீட்டுப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட்டுள்ளார். இதற்காகக் கடந்த சில நாட்களாக அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் அவர் நடத்திய ஆலோசனைகள் தற்போது இறுதிவடிவம் பெற்று வருகின்றன.

நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்களின்படி, அதிமுக கூட்டணி 178 தொகுதிகளில் ‘இரட்டை இலை’ சின்னத்தைப் களம் இறக்கத் திட்டமிட்டுள்ளது. இதில் கூட்டணிக் கட்சிகளுக்கான ஒதுக்கீட்டில், பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 17 தொகுதிகளும், அமமுகவுக்கு 9 தொகுதிகளும், தமாகாவிற்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மேலும், சிறிய கட்சிகள் அதிமுக அல்லது பாஜகவின் சின்னத்திலேயே போட்டியிட அறிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாவட்ட வாக்கு வங்கியை உறுதிப்படுத்தப் புதிய தமிழகம் கட்சியுடன் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.

   

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 5 தொகுதிகள் வரை கோரி வரும் நிலையில், அதிமுக தலைமை 3 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என்பதில் உறுதியாக உள்ளது. குறிப்பாக நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தலித் மக்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில் இந்தக் கூட்டணி அமைய அதிமுக விரும்புகிறது. இதற்கிடையே, தொகுதிப் பங்கீட்டில் நிலவும் சில இழுபறிகளைச் சரிசெய்யவும், இறுதி முடிவை எட்டவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்றுள்ளார்.

   

இன்று இரவு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது பாஜக மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் எவை என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த உயர்மட்ட ஆலோசனையைத் தொடர்ந்து, நாளை (வெள்ளிக்கிழமை) அதிமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.