அறிவாலயத்தில் நடைபெற்று வரும் திமுக உள்கட்சி நேர்காணல், கொங்கு மண்டல மாவட்டங்களின் முறை வந்தபோது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் மாவட்ட வாரியாக வேட்பாளர் நேர்காணலை நடத்தி வருகிறார். வழக்கமாகத் தனித்தனியாக நடத்தப்படும் இந்த நேர்காணல், இம்முறை நேரமின்மை காரணமாக மாவட்ட வாரியாக விண்ணப்பித்த அனைவரையும் ஒரே அறையில் அமரவைத்து நடத்தப்படுகிறது. கோவை, நீலகிரி, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளிடம் கள நிலவரம், அதிமுக-பாஜக கூட்டணி மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தால் ஏற்படும் தாக்கம் குறித்து முதல்வர் பொதுவான கேள்விகளை முன்வைத்தார்.
இந்த நேர்காணலில் பொள்ளாட்சி தொகுதி குறித்த விவாதம் எழுந்தபோது, அங்கிருந்த உடன்பிறப்புகள் அனைவரும் ஒருமித்த குரலில் கூட்டணி கட்சிகளுக்கு, குறிப்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு (கொ.ம.தே.க) சீட் ஒதுக்கக்கூடாது என வலியுறுத்தியது அறிவாலயத்தை அதிரச் செய்துள்ளது. கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கக் கூடுதல் உழைப்பு தேவை என துரைமுருகன் குறிப்பிட்டதற்குப் பதிலளித்த நிர்வாகிகள், கொ.ம.தே.க-விற்குத் தொகுதி ஒதுக்கினால் வெற்றி பெறுவது கடினம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
நிர்வாகிகளின் இந்த எதிர்ப்பிற்குப் பின்னால் வலுவான சமூகக் காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கொ.ம.தே.க ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான கட்சியாகப் பார்க்கப்படுவதால், மாற்று சமூகத்தினர் அந்த வேட்பாளரை ஏற்க மறுப்பதாகவும், அவர்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்கும் சூழல் உருவாவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. திமுகவில் அதே சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பளித்தால் கூட மக்கள் ஏற்பார்கள் என்றும், ஒரு சாதிக்காக இயங்கும் கட்சிக்குத் தொகுதி ஒதுக்குவதை திமுகவில் உள்ள கொங்கு வேளாளர் சமூகத்தினரே விரும்பவில்லை என்றும் அவர்கள் முதல்வரிடம் நேரடியாகத் தெரிவித்தனர்.
இதுவரை நடந்த நேர்காணல்களில் இல்லாத வகையில், கொங்கு மண்டல உடன்பிறப்புகள் காட்டிய இந்த அதிரடி எதிர்ப்பு திமுக தலைமைக்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்தியுள்ளது. “திமுகவில் யாருக்கு வேண்டுமானாலும் சீட் கொடுங்கள், நாங்கள் இணைந்து பணியாற்றி வெற்றி பெற வைக்கிறோம்; ஆனால் கூட்டணிக்கு மட்டும் வேண்டாம்” என்கிற இவர்களின் வாதம், வரும் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாகத் தொண்டர்களிடம் எழுந்துள்ள இந்த ஒருமித்த குரல், கொங்கு அரசியல் களத்தில் திமுகவின் அடுத்தகட்ட நகர்வை உன்னிப்பாகக் கவனிக்க வைத்துள்ளது.
