தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள சூழலில், தன்னைத்தானே சாமியார் என அறிவித்துக் கொண்ட நித்யானந்தாவின் சமூக ஊடகப் பதிவு ஒன்று கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது ‘யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா’ நாட்டின் பிரதிநிதிகள் சென்னை தலைமைச் செயலகத்திற்குச் சென்று, தமிழக அமைச்சர்களான ஸ்ரீநாத், லோகேஷ் மற்றும் வன்னி அரசு ஆகியோரைத் தூதரக ரீதியாகச் சந்தித்ததாக நித்யானந்தா தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், அந்த சந்திப்பின் போது அமைச்சர்களுக்குக் கைலாசாவின் வரலாறு தொடர்பான புத்தகங்கள் வழங்கப்பட்டதாகக் கூறி, அது தொடர்பான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.
நித்தியானந்தாவின் இந்தத் தூதரக சந்திப்பு குறித்த தகவல் பரவியதைத் தொடர்ந்து, அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களும் நெட்டிசன்களின் கேலி கிண்டல்களும் எழுந்தன. இது தொடர்பாகத் தலைமைச் செயலக வட்டாரத்தில் விளக்கம் கேட்டபோது, இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது என்றும், நித்யானந்தா திட்டமிட்டு வதந்தியைப் பரப்பியுள்ளதும் தெரியவந்துள்ளது. பொதுமக்கள் தினசரி தங்களின் குறைகளைத் தெரிவிக்க அமைச்சர்களைச் சந்தித்து மனு அளிப்பது போலத்தான் இந்த நிகழ்வும் நடந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலக அதிகாரிகள் தரப்பில் இது குறித்துக் கூறப்பட்டதாவது, “நித்யானந்தா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது போல எந்தவொரு தூதரக ரீதியிலான சந்திப்போ அல்லது இருதரப்புப் பேச்சுவார்த்தையோ இங்கு நடைபெறவில்லை. அங்கு வந்தவர் ஒரே ஒரு நபர் மட்டுமே. அவர் அமைச்சர்களைச் சந்தித்துப் புத்தகங்களைக் கொடுத்துவிட்டுப் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அதை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த கைலாசா நாட்டின் தூதரகப் பிரதிநிதிகள் குழு அமைச்சர்களைச் சந்தித்ததாக நித்யானந்தா கதை கட்டியுள்ளார்” என்று கோட்டை வட்டாரம் தெளிவாக விளக்கியுள்ளது.
பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளில் சிக்கி, கடந்த 2010-ஆம் ஆண்டு கைதாகிப் பின்னர் ஜாமீனில் வெளிவந்து நாட்டை விட்டே தலைமறைவானவர் இந்த நித்தியானந்தா. ஈக்வடார் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி ‘கைலாசா’ என்ற தனி நாட்டை உருவாக்கியதாகக் கூறிக்கொள்ளும் அவர், தற்போது எங்கு இருக்கிறார் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. எனினும், அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார் என்றும், அந்த வரிசையில்தான் தற்போதைய இந்தச் சென்னை செயலகப் பதிவும் அமைந்துள்ளது என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
