இந்திய வரலாற்றையே உலுக்கிய 2006-ஆம் ஆண்டின் ‘நிதாரி தொடர் கொலை வழக்கு’ குற்றவாளியான சுரேந்தர் கோலி, ஹரித்வாரில் உயிரிழந்ததாக வெளியான செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 2006-இல், மாயமான ஒரு சிறுமியைத் தேடிச் சென்றபோது, தொழிலதிபர் மொனீந்தர் சிங் பாந்தர் என்பவரது D-5 எண் கொண்ட வீட்டின் பின்புற கழிவுநீர் கால்வாயில் இருந்து மனித எலும்புக்கூடுகள், மண்டையோடுகள் மற்றும் ஆடைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த வீட்டின் வழியாகச் செல்லும் சிறுமிகளையும் பெண்களையும் சுரேந்தர் கோலி ஏமாற்றி வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்துக் கொன்றதாக சிபிஐ விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் பலியான 15 வயது சிறுமியின் தந்தை வெள்ளிக்கிழமை அதிரடி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். சுரேந்தர் கோலி தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். வழக்கின் பின்னணியில் உள்ள பல ரகசியங்கள் வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
சுரேந்தர் கோலியின் இந்த திடீர் மர்ம மரணம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையின் கொந்தளிப்பான குற்றச்சாட்டு ஆகியவை நிதாரி வழக்கில் மீண்டும் பெரும் பரபரப்பையும் சட்ட ரீதியான விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
