அலட்சியம் வேண்டாம் மக்களே…! நிபா வைரஸ் தாக்குதல்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்…!

By Swetha on ஆனி 14, 2026

Spread the love

கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் மாவட்டத்தில் தீவிர முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். வௌவால்கள், பன்றிகள் போன்ற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய இந்தத் தொற்று குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற பாதிப்புள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்தவர்களின் விவரங்கள் மற்றும் தொடர்பு வரலாறுகளைச் சேகரித்து பதிவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் காய்ச்சல், கடுமையான தலைவலி, வாந்தி, இருமல், தசைவலி, வலிப்பு மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். தீவிரமான நிலையில் மனநிலை மாற்றம், மயக்கம் மற்றும் மூளை அழற்சி போன்ற கடுமையான பாதிப்புகள் உண்டாகலாம். இந்தத் தொற்றானது பாதிக்கப்பட்ட நபர்கள், வௌவால்கள் அல்லது பன்றிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதாலும், மரங்களில் இருந்து கீழே விழுந்த மற்றும் பறவைகள்/விலங்குகள் கடித்த பழங்களைச் சாப்பிடுவதாலும் மனிதர்களுக்குப் பரவுகிறது.

   

பொதுமக்கள் தேவையற்ற அச்சம்கொள்ளத் தேவையில்லை என்றும், ஒருசில எளிய முன்னெச்சரிக்கை நடைமுறைகளைப் பின்பற்றினால் இதிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன்படி, வௌவால்கள் கடித்த அல்லது தரையில் விழுந்த பழங்களைச் சாப்பிடக் கூடாது; நல்ல பழங்களையும் நன்கு கழுவி, தோல் சீவிய பிறகே சாப்பிட வேண்டும். மேலும், பயன்படுத்தப்படாத கிணறுகள் மற்றும் குகைகளுக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். காய்ச்சல், மனநிலை மாற்றம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையையோ அல்லது மாவட்டக் கட்டுப்பாட்டு அறையையோ தொடர்பு கொண்டு சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.