திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த வாலிபர் அஜித்குமார் காரிலிருந்து தன்னுடைய 10 சவரன் நகை திருடிவிட்டதாக பேராசிரியர் ஆன நிகிதா புகார் அளித்ததன் பெயரில்தான் போலீசார் வழக்கு பதிவு செய்யாமலேயே வாய்மொழி உத்தரவின் பெயரில் அடித்து விசாரித்த போது தான் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். பேராசிரியை நிகிதா தன்னுடைய அதிகார செல்வாக்கை பயன்படுத்தி சென்னையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு பேசியதாகவும், அதன் பிறகு தான் அஜித்குமார் சட்டவிரோதமாக காவலில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டு விசாரணைக்கு உட்பட்டதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
மேலும் நிகிதா மோசடி பேர் வழியாக வலம் வந்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில் தான் நிகிதா பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையோடு இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வரும் நிகிதா தீவிர பாஜக ஆதரவாளராக செயல்பட்டு வந்தது அம்பலம் ஆகியுள்ளது. மேலும் பாஜக அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர் அண்ணாமலையை பாராட்டி பல்வேறு பதிவுகள் வெளியிட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
