தென்காசி மாவட்டம், மங்கம்மாள் சாலை பகுதியைச் சேர்ந்த சக்தி வீர மணிகண்டன் (32) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அன்னலட்சுமி (24) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாள் முதலே இருவருக்கும் இடையே உடலுறவு கொள்வது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தாம்பத்திய உறவில் அன்னலட்சுமிக்கு விருப்பம் இல்லாத நிலையில், கணவன் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் இருவருக்குள்ளும் மனக்கசப்பு அதிகரித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 26-ஆம் தேதி இரவு இவர்களுக்குள் மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அன்னலட்சுமி பேசிய சில வார்த்தைகளால் ஆத்திரமடைந்த சக்தி வீர மணிகண்டன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அன்னலட்சுமியின் கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அன்னலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கொடூரமான இந்தச் சம்பவத்திற்குப் பிறகும், கணவன் சற்றும் பதற்றமின்றி வீட்டின் கதவை பூட்டிவிட்டு மொட்டை மாடிக்குச் சென்று உறங்கியுள்ளார்.
மறுநாள் காலையில், தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்குச் சென்ற சக்தி வீர மணிகண்டன், தானாக முன்வந்து நீதிபதி முன் ஆஜராகி மனைவியைக் கொலை செய்ததாகக் கூறி சரணடைந்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிமன்றப் பணியாளர்கள் உடனடியாகத் தென்காசி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவலர்கள், பூட்டிக்கிடந்த வீட்டிற்குச் சென்று அன்னலட்சுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள தென்காசி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு நீதிமன்றத்தில் சரணடைந்த சக்தி வீர மணிகண்டனைச் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திருமணமான 6 மாதங்களிலேயே புதுப்பெண் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
