நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே உள்ள தெற்கு பால்பண்ணைச்சேரியைச் சேர்ந்தவர் கஜேந்திரன். ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவருக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில், மறுநாள் அவரது தங்கைக்குத் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், முந்தைய நாள் இரவு கணவன் – மனைவி இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கஜேந்திரன், வீட்டின் ஓர் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார்.
விடிந்த பின் அவரது மனைவி அறைக்குள் சென்று பார்த்தபோது, கஜேந்திரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்துத் தகவலறிந்த நாகூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலைக் கைப்பற்றினர். பின்னர், உடற்கூறு ஆய்வுக்காக நாகை ஒரத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்தத் தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்கையின் திருமணத்தன்று அண்ணன் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
