சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட பல நிகழ்ச்சிகளை சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகள் ஏற்பாடு செய்து வருகின்றன. வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் அதிகாலை ஒரு மணி வரை நடைபெறும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தவிர்ப்பதற்காக காவல்துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஹோட்டல்கள், நட்சத்திர உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை இட்டு பதிவு செய்வது, அனைத்து நுழைவு வாயில்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, நிகழ்ச்சி மற்றும் விருந்து நடைபெறும் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, தீயணைப்புத்துறை ஆகியவற்றின் தகுதி சான்றிதழ் பெறுவது, அனுமதிக்கப்பட்ட அரங்கத்தில் மட்டுமே புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்துவது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. நட்சத்திர ஹோட்டல்களை தவிர்த்து சென்னை மெரினா கடற்கரை, ஏலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலை, ராஜீவ் காந்தி சாலை ஆகிய இடங்களில் பொதுமக்களின் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் என்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
