திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட அதிமுக-வில் சமீபகாலமாக நிர்வாகிகள் சிலர் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளுக்குச் சென்றதால் ஏற்பட்ட தொய்வை போக்கும் வகையில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நிர்வாக மாற்றங்களை அறிவித்துள்ளார். ஏற்கனவே முக்கியப் பொறுப்புகள் நிரப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது எம்.ஜி.ஆர் மன்றம், ஜெயலலிதா பேரவை, இளைஞர் அணி, அண்ணா தொழிற்சங்கம், மாணவர் அணி, மகளிர் பாசறை மற்றும் இலக்கிய அணி ஆகிய துணை அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சிந்தாமணி, மலைக்கோட்டை, காந்தி மார்க்கெட், கருமண்டம், காஜாமலை, பொன்னகர், பாலக்கரை, உறையூர், தில்லைநகர், அண்ணா நகர், புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி மற்றும் வட்ட அளவிலான பொறுப்புகளுக்கு சுமார் 500 புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த அதிரடி நியமனங்கள் மூலம் திருச்சி மாநகர அதிமுக-வில் புதிய ரத்தம் பாய்ச்சப்பட்டு, தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் எழுச்சியும் புதுப்பொலிவும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வரும் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை வலுவான பலத்துடன் எதிர்கொள்ளும் நோக்கில், இந்தப் புதிய அறிவிப்பில் இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் அதிக அளவில் முன்னுரிமை அளிக்கப்பட்டு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. களப்பணியை தீவிரப்படுத்தி தொண்டர்களை ஒருங்கிணைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, திருச்சி மாவட்ட அ.தி.மு.க அரசியல் களத்தில் புதிய வேகத்தையும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
