தமிழக அரசியலில் சோஷியல் மீடியா செல்வாக்கும், மாற்றுக்கட்சியில் இருந்து வருபவர்களுக்கான முக்கியத்துவமும் மீண்டும் ஒருமுறை பரபரப்பாக விவாதிக்கப்படத் தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் வைஷ்ணவிக்கு, விரைவில் திமுக மாணவரணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியில் இளைஞர்களுக்கும், சோஷியல் மீடியாவில் திமுக கொள்கைகளைப் தீவிரமாகப் பேசுபவர்களுக்கும் முன்னுரிமை அளித்து பொறுப்புகளை வழங்க தலைமை முடிவு செய்துள்ளதால், இந்த நடவடிக்கை கட்சியின் இளம் நிர்வாகிகள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைஷ்ணவி தவெக தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் இன்ஸ்டாகிராமில் விஜய் ஆதரவு வீடியோக்கள் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தவர். ஆனால், அங்கு ஏற்பட்ட மாவட்டச் செயலாளர் உடனான கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார். பின்னர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அழைப்பை ஏற்று திமுகவில் ஐக்கியமானார். இணைந்தது முதல் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியதுடன், சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகவின் கொள்கைகளைப் பேசி, தவெகவை கடுமையாக விமர்சித்து அவர் பேசிய பேச்சுக்கள் தமிழ்நாடு முழுவதும் டிரெண்டாகி, மகளிர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
தற்போது வைஷ்ணவிக்கு செந்தில் பாலாஜியின் முழு ஆதரவும் இருப்பதால், மாணவரணி துணைச் செயலாளர் பதவி கிடைப்பதில் எந்தவிதமான சிக்கலும் இருக்காது என்றே கூறப்படுகிறது. இருப்பினும், கட்சிக்குள் இருக்கும் சிலர், “நீண்ட காலமாக உழைத்து வரும் தொண்டர்களை விட்டுவிட்டு, மாற்றுக்கட்சியில் இருந்து திடீரென வந்தவர்களுக்கே உடனடியாக முக்கிய பொறுப்புகள் வழங்கி முன்னுரிமை அளிப்பது எந்த வகையில் நியாயம்?” என்ற கேள்விகளையும், எதிர்ப்புக் குரல்களையும் மெல்ல உயர்த்தத் தொடங்கியுள்ளனர்.
அதேவேளையில், வைஷ்ணவிக்கு ஆதரவாகவும் திமுகவிற்குள்ளேயே சில செண்டிமெண்ட் குரல்கள் ஒலிக்கின்றன. “அவர் தவெகவிலேயே தொடர்ந்து இருந்திருந்தால், வரும் தேர்தலில் எம்.எல்.ஏ சீட் பெற்று சட்டமன்ற உறுப்பினராகக் கூட ஆகியிருக்க வாய்ப்புள்ளது. ஆனால், திமுகவின் மீது கொண்ட ஈர்ப்பால் இங்கு வந்ததால் அந்த வாய்ப்பை இழந்துவிட்டார்” என்று சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த ஆதரவு அலையினாலும், தலைமையின் கிரீன் சிக்னலாலும் வைஷ்ணவியை தேடி விரைவில் ஒரு பெரிய கட்சிப் பொறுப்பு வருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
