2024 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்தியாவிலுள்ள முன்னணி வங்கிகள் தங்களது கிரெடிட் கார்டு விதிமுறைகளில் சில அதிரடி மாற்றங்களை அமல்படுத்தியுள்ளன. குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் போன்ற வங்கிகள் இந்த மாற்றங்களை அறிவித்துள்ளன. எஸ்பிஐ கார்டுதாரர்கள் இனி வாடகை செலுத்துவதற்கு ரிவார்டு புள்ளிகளைப் பெற முடியாது.
அதேபோல், ஐசிஐசிஐ வங்கி விமான நிலைய ஓய்வறை வசதியைப் பயன்படுத்த, ஒரு காலாண்டில் குறைந்தபட்சம் ரூ. 35,000 செலவு செய்திருக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையை விதித்துள்ளது. ஆக்சிஸ் வங்கி தனது மாக்னஸ் போன்ற பிரீமியம் கார்டுகளில் காப்பீடு மற்றும் எரிபொருள் செலவுகளுக்கான ரிவார்டு புள்ளிகளை ரத்து செய்துள்ளது.
மேலும் வருமான வரித் துறையும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளைத் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. ஒரு நிதியாண்டில் கிரெடிட் கார்டு மூலம் ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேல் டிஜிட்டல் முறையிலோ அல்லது ரூ. 1 லட்சம் வரை ரொக்கமாகவும் பில் செலுத்தினால், அந்த விவரங்கள் வருமான வரித் துறைக்குத் தெரிவிக்கப்படும்.
மேலும், புதிய விதிகளின்படி கிரெடிட் கார்டு விண்ணப்பங்களுக்கு பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் செலவு செய்யும் முறையைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நிதி மேலாண்மையில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
