ஜப்பானின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் வசிக்கும் ‘பஞ்ச்’ என்ற குட்டி ஜப்பானிய குரங்கின் நெகிழ்ச்சியான கதை இணையத்தில் வைரலாகி வருகிறது. பிறந்ததுமே தனது தாயால் கைவிடப்பட்ட பஞ்ச், ஆரம்பத்தில் தனிமையால் வாடியது. அதன் மன அழுத்தத்தைப் போக்க உயிரியல் பூங்கா ஊழியர்கள் அதற்கு ஒரு மென்மையான பொம்மையைத் துணையாக வழங்கினர்.
மேலும் அந்தப் பொம்மையையே தன் தாயாகக் கருதி பஞ்ச் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் காட்சிகள் உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்களின் இதயங்களை வென்றன. பஞ்ச்சின் இந்தத் துயரமான தொடக்கம், தற்போது ஒரு அழகான நட்பின் மூலம் மகிழ்ச்சியாக மாறியுள்ளது.
தற்போது பஞ்ச், தன்னை விட சற்று வயதில் பெரிய ‘மோமோ-சான்’ அல்லது ‘மோ’ என்ற பெண் குரங்குடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. இவை இரண்டும் ஒன்றாக விளையாடும் மற்றும் முத்தமிடுவது போன்ற அன்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.
இதைப் பார்த்த இணையவாசிகள், “பஞ்ச்சிற்கு காதலி கிடைத்துவிட்டது” என்று வேடிக்கையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் “பிரபலமாவதற்காகவே பஞ்ச்சுடன் மோ பழகுகிறாள்” என கிண்டலாகக் கூறினாலும், பஞ்ச் தனது தனிமையிலிருந்து மீண்டு மற்றொரு குரங்குடன் சமூக உறவை ஏற்படுத்திக் கொண்டது விலங்கு ஆர்வலர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
