“எங்களோட மோதாதீங்க…. அப்படி பண்ணா இது தான் நடக்கும்”…. ஈரானுக்கு நெதன்யாகு கொடுத்த உச்சகட்ட எச்சரிக்கை…. பதறும் உலக நாடுகள்…!

By Nanthini on புரட்டாதி 5, 2026

Spread the love

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீடித்து வரும் மோதல் போக்கு தற்போது மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை மிகக் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், “எங்களுடன் மோத முயற்சிக்காதீர்கள்” என ஈரானுக்கு நெதன்யாகு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது மத்திய கிழக்கு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, நெதன்யாகுவை ஒரு “பாம்பு” என கடுமையாகச் சாடினார். அமெரிக்காவை ஈரானுக்கு எதிரான போரில் ஈடுபடுத்த நெதன்யாகு தொடர்ந்து தூண்டி வருவதாகவும், அமெரிக்க ஊடகங்களைப் பயன்படுத்தி அந்நாட்டு நிர்வாகத்தின் முடிவுகளைத் தன் பக்கம் திருப்பியதாக அவரே பெருமையுடன் கூறிக்கொள்வதாகவும் அராக்சி குற்றம் சாட்டினார். இந்த நேரடி விமர்சனம் இரு நாடுகளுக்கும் இடையிலான வார்த்தைப் போரை மேலும் தீவிரப்படுத்தியது.

   

ஈரானின் இந்த விமர்சனத்திற்கு உடனடியாகப் பதிலளித்த இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு, ஈரானின் தற்போதைய ஆட்சியை வீழ்த்துவது தங்களுக்கு எட்டக்கூடிய தூரத்தில்தான் உள்ளது எனக் கூறினார். “எங்கள் பலம், ராணுவ சக்தி மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றை எதிரிகள் அறிவார்கள். பொதுவாக எங்கள் எதிரிகளுக்கு நான் சொல்வது ஒன்றுதான்; எங்களுடன் மோத முயற்சிக்காதீர்கள்” என்று அவர் ஈரான் அரசை மிகக் கடுமையான தொனியில் எச்சரித்துள்ளார்.

   

சமீபகாலமாக இந்த போர்ச் சூழல் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நேரடி மோதலாக மாறிக்கொண்டிருந்த நிலையில், நெதன்யாகுவின் இந்த அதிரடி அறிக்கை இஸ்ரேல் மீண்டும் களத்தில் தீவிரமாக இறங்குவதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. இரு நாட்டுத் தலைவர்களின் இந்த பரஸ்பர எச்சரிக்கைகள் மற்றும் தீவிரமடைந்து வரும் கருத்துமோதல்கள், மத்திய கிழக்கில் போர்ப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன.