பில்லா திரைப்படத்தின் மூலமாக பிரபலமான இயக்குனர் விஷ்ணுவரதன் இயக்கத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். இவருடன் இணைந்து அதிதி சங்கர் நடித்துள்ள நிலையில் நேசிப்பாயா திரைப்படம் நேற்று வெளியானது. இந்த திரைப்படத்தை XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தில் அதிதி சங்கர் மீது நடிகர் ஆகாஷ் முரளிக்கு காதல் ஏற்பட அதனை அவரிடம் கூறுகின்றார். ஒரு கட்டத்தில் அதிதி சங்கர் சில கண்டிஷன் போட்டு அந்த காதலை ஏற்றுக் கொள்கிறார். அதற்கு ஆகாஷ் சம்மதம் தெரிவிக்க இருவரும் தங்களுடைய காதல் பயணத்தை தொடங்குகிறார்கள்.

ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பின்னர் அதிதி சங்கர் வேலை கிடைக்க போர்ச்சுக்கல் நாட்டுக்கு செல்கிறார். ஆனால் அங்கு தெரியாத்தனமாக ஒரு கொலை வழக்கில் சிக்கி சிறக்கி செல்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு காதலில் சிறைக்குச் சென்றதை அறிந்த ஆகாஷ் போர்ச்சுக்கல் நாட்டுக்குச் சென்று அதிதியை மீட்க முயற்சிக்கிறார். அதிதிக்கு என்ன ஆனது, அவர் அந்த கொலையை செய்தாரா, ஆகாஷ் அவரை எப்படி சிறையிலிருந்து மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதையாக அமைந்துள்ளது. இயக்குனர் விஷ்ணுவர்தன் தமிழில் 10 வருடத்திற்கு பிறகு கம்பேக் கொடுக்கும் திரைப்படம் தான் நேசிப்பாயா. இந்த திரைப்படம் அதர்வாவின் தம்பியான ஆகாசுக்கு முதல் படமாக அமைந்துள்ளது.

முதல் படம் என்பதால் நடிப்பு மற்றும் சண்டை காட்சிகளில் முடிந்த அளவுக்கு சிறப்பாக நடிக்க முயற்சித்துள்ளார். அதிதி சங்கர் பல இடங்களில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார் மற்றும் குஷ்பூ தங்களுடைய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஆகாஷ் முரளிக்கு இது ஒரு நல்ல அறிமுகம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதிலும் படத்தில் சிறையில் இருக்கக்கூடிய அதிதி தன்னை பார்க்க மறுப்பு தெரிவித்த போது அவர் குரலை மட்டும் கேட்டு கண்ணீர் வடித்த ஆகாஷ் நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது.

காதல் படமாக இருந்தாலும் பெரிய அளவு காதல் காட்சிகள் எதுவும் ஒர்க்அவுட் ஆகவில்லை. யுவன் சங்கரின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. படத்தின் கதை ஸ்லோவாக இருப்பது போல் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை நாமே கணித்து விடலாம் என்பது போல் படத்தின் காட்சிகள் அமைந்துள்ளது. மற்றபடி திரைப்படத்தின் சிறப்பான காட்சிகள் எதுவும் அமையவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
