ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திரா (35) என்பவர் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படையில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் மவுனிகா (29) என்ற பெண்ணுக்கும் நீண்ட நாட்களாகக் கள்ளத்தொடர்பு இருந்து வந்த நிலையில், மவுனிகா அடிக்கடி பணம் கேட்டு ரவீந்திராவைத் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரவீந்திரா, தனது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் மவுனிகாவைத் தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்துக் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்தார். அதோடு நிற்காமல், கொடூரமான முறையில் மவுனிகாவின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, பிளாஸ்டிக் பைகளில் அடைத்துத் தனது வீட்டுப் பிரிட்ஜிற்குள் மறைத்து வைத்துள்ளார்.
இந்தக் கொடூரச் செயலுக்குப் பிறகு ரவீந்திரா நேரடியாகப் போலீஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், பிரிட்ஜில் இருந்த உடல் பாகங்களை மீட்டனர். ஆனால், பெண்ணின் தலை மட்டும் அங்கு இல்லாததால், அதனைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கள்ளக்காதலியைத் தீர்த்துக்கட்டிவிட்டு எவ்விதச் சலனமும் இன்றி சரணடைந்த கடற்படை ஊழியரின் செயல் விசாகப்பட்டினத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படுபாதகச் செயல் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளியைக் கைது செய்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
