டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், அணை திறக்கப்பட வேண்டிய தேதியன்று வந்து, நீர்வரத்து குறைவாக உள்ளதால் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்பு வழங்குகிறோம் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது அதன் நிர்வாக அலட்சியத்தைக் காட்டுகிறது. அணையின் நீர்வரத்து குறைவாக இருக்கும் விஷயம் தமிழக அரசுக்கு நேற்று தான் தெரியவந்ததா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது தொடர் மின்வெட்டுப் பிரச்சினைகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. இத்தகையச் சூழலில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பயிர்களைக் காப்பாற்ற 18 மணிநேரத் தடையில்லா மின்சாரம் தங்கு தடையின்றி வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பது எந்த அளவிற்குச் சாத்தியம் மற்றும் உண்மையானது என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக ஒரு முறையான ஆய்வுக் குழுவை அமைத்து, இப்பிரச்சினையைப் போர்க்கால அடிப்படையில் அணுக வேண்டும். முதலமைச்சரின் நிர்வாக அலட்சியத்தால் டெல்டா விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்குத் தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
