தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் சமீபத்தில் நடைபெற்ற கரூர் விவகாரம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது. இதனை விஜய் சட்ட ரீதியாக கையாண்டு வரும் நிலையில் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமீபத்தில் வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. அதே சமயம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து சென்னை மாமல்லபுரத்தில் நேற்று விஜய் சந்தித்து பேசி இருந்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த விஜய் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வி செலவை தானே ஏற்றுக் கொள்வதாகவும் வேலை வாய்ப்பை உறுதி செய்வதாகவும் வாக்குறுதி அளித்தார். ஆனால் கரூருக்கு நேரடியாக செல்லாமல் எந்தவிதமான அபாயமும் ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து விஜய் இந்த சந்திப்பை நடத்தினார். இருந்தாலும் கரூர் மக்களை நேரடியாக சந்திக்காததை பல தரப்பினர் விமர்சித்து வரும் நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
கரூரில் பாதுகாப்பு இருக்காது என்பதால் மாமல்லபுரத்தில் அழைத்திருக்கலாம் என்று தெரிவித்த அவர், விஜய்க்கு அச்சுறுத்தல் இருப்பதால் இந்த செயலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. விஜய்யை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் ஏற்கனவே பாஜக ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த விவகாரம் விஜயின் அடுத்த அரசியல் நடவடிக்கைகள் எப்படி அமையும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
