தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 90 களில் கோலோச்சிய தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆர் பி சௌத்ரி. அவர் படங்களின் தனிச்சிறப்பே புதுமுக இயக்குனர்களைக் கொண்டு நல்ல கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து சூப்பர் ஹிட் கொடுத்ததுதான். இதுவரை அவர் 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அப்படி அவர் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு உருவான திரைப்படம்தான் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் எழில் இயக்க விஜய், சிம்ரன், பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சார்லி சாப்ளினின் சிட்டி லைட்ஸ் திரைப்படத்தின் தாக்கத்தில் இந்த படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குனர் எழில்.
பூவே உனக்காக திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்து பெரிய வெற்றியை எதிர்பார்த்த விஜய்க்கு இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்தது. விஜய்க்கு மட்டும் இல்லாமல் சிம்ரனுக்கும் இந்த படம் மிகப்பெரிய ஒரு வெற்றிப் படமாக அமைந்து , அவருக்கு ஒரு நல்ல பெயரைப் பெற்று தந்தது.
இந்த படத்தின் வெற்றியை அடுத்து இதே கதையை தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் ஆர் பி சௌத்ரி. அதில் கதாநாயகனாக நாகார்ஜுனா நடித்துள்ளார். அவர் இந்த கதையைக் கேட்டுவிட்டு ‘கதை நன்றாக இருக்கிறது. ஆனால் கிளைமேக் இங்கு எடுபடாது. ஒரு கலெக்டர் நடுரோட்டில் ஓடிவருது போல காட்டினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ‘ எனக் கூறியுள்ளார்.
ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி ‘ஏன் ரசிக்க மாட்டாங்க? எல்லா ஊர்லையும் செண்ட்டிமெண்ட் ஒன்னுதான்,அதெல்லாம் மாத்த முடியாது’ என உறுதியாக சொல்லியுள்ளார். அவரின் பிடிவாதத்தால் அதே க்ளைமேக்ஸில் நடிக்க நாகார்ஜுனா சம்மதித்துள்ளார். படமும் வெளியாகி சௌத்ரி சொன்னது போலவே படம் சூப்பர் ஹிட்டாகி 18 தியேட்டர்களில் சில்வர் ஜுப்ளியாக 175 நாட்கள் ஓடியுள்ளது.
